புதுச்சேரி

அரியாங்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: மின்துறை அதிகாரியிடம் மனு

புதுச்சேரி, செப். 7:
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுவதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அரியாங்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். அப்போது, அரியாங்குப்பம் தொகுதியில் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து அவர் பேசுகையில், “வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வரும் நபர்கள் யார் என்ற அடையாளம் தெரியாதவர்களாக உள்ளனர். எனவே, ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வரும்போது அரசு மின் துறை ஊழியர் ஒருவர் உடன் இருக்க வேண்டும். அப்போதுதான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் போர்வையில் மர்ம நபர்களால் வீடுகளில் திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, மின்துறை அலுவலகத்தில் இருந்த இளநிலை பொறியாளரைச் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை காங்கிரஸ் நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன