தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் தடை!

புதுச்சேரி, 12/09/2026: புதுச்சேரி மாவட்டத்திற்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கருத்துக்கணிப்புகள் (Opinion Polls) மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை (Exit Polls) வெளியிட தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் காலியாக உள்ள உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 126A(1)-ன் படி, வாக்குப்பதிவு நாளான அக்டோபர் 6-ஆம் தேதி காலை 7.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் அல்லது வேறு எந்த வகையிலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (Exit Poll) நடத்துவதும், அதன் முடிவுகளை வெளியிடுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126(1)(b)-ன் கீழ், வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு முந்தைய 48 மணி நேர காலப்பகுதியில், கருத்துக்கணிப்பு (Opinion Poll) தொடர்பான எவ்வித தேர்தல் செய்திகளையும் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை பாயும் என மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
