புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி செவிலியர் சங்கம் வாயிற்கூட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவன வளாகத்தில், புதுவை அரசு செவிலியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் லட்சுமணசாமி, செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். செவிலியர் சங்க கௌரவத் தலைவர் துளசி பாக்கியவதி, தலைவர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்து நோக்க உரையாற்றினர். சங்கத்தின் செயலாளர் ஹரிகரன் செவிலியர்களின் பணிச்சுமை மற்றும் பல்வேறு இன்னல்களை எடுத்துரைத்துப் பேசினார்.

புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 75 செவிலிய அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதால், சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இஎஸ்ஐ மருத்துவமனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால், அங்குள்ள 17 செவிலியர்கள் மற்றும் 4 முதுநிலை செவிலிய அதிகாரிகளை உடனடியாக இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி மகளிர் மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் மாஹே, ஏனாம் பிராந்திய காலிப் பணியிட விவகாரத்தில் ஊழியர்களுக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் மாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகக் கூறி அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், முறையான இடமாறுதல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன