புதுச்சேரி

மணப்பட்டு கிராமத்தில் நிறமாறி வரும் குடிநீர் மக்களிடம் அச்சம்

புதுச்சேரி, அக்டோபர் 20: பாகூர் அடுத்த மணப்பட்டு கிராமத்தில் அரசு பம்பவுஸ் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறமாறி வருவதால் பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

பாகூர் தொகுதிக்கு உட்பட்ட மணப்பட்டு கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள துணை சுகாதார நிலையம் அருகே உள்ள ஆழ்துழைக் கிணறு மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால் குடிநீர் வினியோகம் தொடங்கும்போது மஞ்சள் நிறத்தில் நீர் வருவதாகவும் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகே தண்ணீர் தெளிவாக மாறுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்துவதற்கு அச்சப்படும் பொதுமக்கள், குடிநீரின் தரம் முறையாக பரிசோதிக்கப்படாவிட்டால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு குடிநீரின் தரத்தை பரிசோதித்து பாதுகாப்பான குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன