ரவுடி கொலை வழக்கில் ஆறு பேர் கைது மேலும் மூன்று பேருக்கு வலைவீச்சு
புதுச்சேரி, அக்டோபர் 20: கடலூர் மாவட்டம் நெட்டப்பாக்கம் அருகில் உள்ள கரிக்க நகரைச் சேர்ந்த பிரவீண்குமார் என்பவர் பட்டப்பகலில் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை புதுச்சேரி தவளக்குப்பம் போலீசார் கைது செய்துள்ளனர்.
டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்த பிரவீண்குமார், கடந்த 16ஆம் தேதி அபிஷேகப்பாக்கத்தில் பைக்கில் சென்றபோது காரில் வந்த கும்பலால் சராமரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வில்லியூரை அடுத்த கீழூர் பகுதியில் பதுங்கியிருந்த நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்த ஏகாம்பரம், அரம்காத்துபுரம் பாரதிதாசன் வீதியைச் சேர்ந்த கிஷோர், அதே பகுதியைச் சேர்ந்த புகழ், ரெட்டியார்பாளையம் பூமியான்பேட்டையைச் சேர்ந்த விஜி, தர்மபுரியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கனுவப்பேட்டை கப்பக்கடையைச் சேர்ந்த சிவகுமார் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
வானரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடியான பாம் ரவி கொலை வழக்கில் பிரவீண்குமார் சேர்க்கப்பட்டு பின்னர் அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை அரங்கேறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் பயன்படுத்திய மாருதி ஸ்விப்ட் கார் மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாம் ரவியின் கூட்டாளியான வானரப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.