புதுச்சேரி

புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்: சிவப்பு அட்டைதாரர்களுக்கு டிஜிட்டல் கரன்சி பெற முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி, அக். 10:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு மானிய நிதியுதவியை டிஜிட்டல் கரன்சி (Digital Currency) வடிவில் பெறுவதற்கான ‘ஒயிட் லிஸ்டிங்’ (White-listing) சிறப்பு முகாம்கள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தொடங்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 18 வரை முழு வீச்சில் நடைபெற உள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியுடைய சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்கள் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு திட்டப் பலன்களை டிஜிட்டல் கரன்சி மூலம் பெறுவதற்கு இந்த ஒயிட் லிஸ்டிங் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இதற்கான பிரத்யேக சேவை வழங்கப்படுகிறது.

இம்முகாம்களில் பயனாளிகளை ஒயிட் லிஸ்டிங் செய்யும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த நடைமுறையை முடிக்காத சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்கள், உடனடியாக தங்களுக்குரிய நியாய விலைக் கடைக்குச் சென்று இப்பணியை நிறைவு செய்து பயன்பெறுமாறு குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.

முகாமிற்கு வரும் பயனாளிகள் அசல் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை கட்டாயமாக உடன் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் விரல்ரேகை மற்றும் ஓ.டி.பி சரிபார்ப்பு விரைவாக முடிக்கப்பட்டு, அரசின் நிதிப் பலன்கள் தடையின்றி நேரடியாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன