கதிர்காமம் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் பாலகிருஷ்ணன் பிறந்தநாள்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்!
புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், பாலு ஹரி பில்டர்ஸ் உரிமையாளருமான பாலு என்ற பாலகிருஷ்ணனின் பிறந்தநாள் விழா, பல்வேறு மக்கள் நலப் பணிகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, இன்று மாலை தமிழ் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் என். ரங்கசாமி முன்னிலையில் பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
தனது பிறந்தநாளையொட்டி முன்னதாக கோரிமேடு அடுத்த பட்டானூர் பகுதியில் உள்ள புற்றுநோயாளிகள் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி. என்கிற அழகானந்தம் முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை மாணிக்கம் செட்டியார் நகரில் அமைந்துள்ள நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆதரவாளர்கள் சார்பில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகளில் அவர் கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் வி.பி. சிங் நகர் மற்றும் மூலக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
இன்று மாலை 4 மணிக்கு தமிழ் திருமண மண்டபத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வில், புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமை தாங்கி கேக் வெட்டி வாழ்த்து தெரிவிக்கிறார். கதிர்காமம் எம்.எல்.ஏ. அழகானந்தம் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்ச்சியில், சுமார் 1,500 பேருக்கு பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இப்பிறந்தநாள் விழா மற்றும் மக்கள் நலப் பணிகளுக்கான விரிவான ஏற்பாடுகளை, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும் கேசவா ரியல் குரூப்ஸ் உரிமையாளருமான சுகு என்கிற சுகுமாரன் தலைமையில் அழகு அறக்கட்டளையினர் மற்றும் ஆதரவாளர்கள் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.


