காரைக்காலில் 70 பட்டியலின விவசாயிகளுக்கு இலவச வேளாண் இடுபொருட்கள்: அமைச்சர் ராஜசேகரன் வழங்கினார்!
காரைக்கால், செப். 8:
காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ் பட்டியலின விவசாயிகளுக்கு இலவச வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் மற்றும் அமைச்சர் ராஜசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட 70 பட்டியலின விவசாயிகளுக்கு இலவச உரம், விதைகள், பூச்சி மருந்துகள் மற்றும் தெளிப்பான் (Sprayers) உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த இலவச இடுபொருட்கள் மற்றும் நவீன கருவிகளை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற வேண்டும். அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் தகுதியான விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வேளாண் துறை உயர் அதிகாரிகள், விரிவாக்க அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


