புதுச்சேரி

சங்கரன்பேட், மணக்குப்பத்தில் ₹2.78 கோடியில் புதிய குடிநீர் திட்டம்: முதலமைச்சர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்!

புதுச்சேரி, செப். 08:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் தடையின்றி தரமான குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், வில்லியனூர் கொம்யூன் மங்கலம் தொகுதிக்குட்பட்ட சங்கரன்பேட் மற்றும் மணக்குப்பம் கிராமங்களில் நபார்டு (NABARD) வங்கி நிதி உதவியுடன் ரூ.278.80 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இக்கிராமப் பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் 0.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட உள்ளன. மேலும், நவீன நீர் உந்து மோட்டார்கள் பொருத்துதல், புதிய விநியோகக் குழாய்கள் பதித்தல் மற்றும் வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட கிராமக் குடிநீர் உட்கோட்டம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 4,000 பொதுமக்கள் பயனடைவர்.

இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ந.ரங்கசாமி கலந்துகொண்டு பணிகளை அடிக்கல் நாட்டி முறைப்படி தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ரவிக்குமார், இ.மோகன்தாஸ், பொதுப்பணித்துறை செயலர் டாக்டர் ஏ.முத்தம்மா, தலைமைப் பொறியாளர் கே.வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் என்.சுந்தரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன