தேசிய ‘நீபா’ விருதுகளை வென்று சாதனை: புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளை நேரில் பாராட்டிய துணைநிலை ஆளுநர்!

புதுச்சேரி: தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் புதுமையான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி ‘நீபா’ (NIEPA) தேசிய விருதுகளை வென்ற புதுச்சேரியைச் சேர்ந்த 5 கல்வித்துறை அதிகாரிகளை, துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் நேரில் சந்தித்துப் பாராட்டி கௌரவித்தார்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட 751 விண்ணப்பங்களில், புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளின் 5 முன்முயற்சிகள் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் மூலிகைத் தோட்டங்கள் அமைத்தல், யோகா பயிற்சிகள், பிரத்யேக கற்றல் மூலைகள், சிறப்புக் கல்வி மேம்பாடு மற்றும் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார மேலாண்மை உள்ளிட்ட முன்னோடித் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுத்ததற்காக அதிகாரிகள் திரு. குலசேகரன், திரு. அமல்ராஜ் லீமாஸ், திரு. லிங்கசாமி, திரு. சரவணன் மற்றும் திருமதி ஹெலன் ராணி ஆகியோர் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
விருது வென்ற அதிகாரிகளை வாழ்த்திய துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், மாணவர்களின் நலன் மற்றும் கல்வி நிர்வாகத்தில் புதுச்சேரி அதிகாரிகள் காட்டியுள்ள அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த நாட்டிற்கே சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது எனவும், தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
