புதுச்சேரி

இலவச கல்வி திட்டம்: எஸ்சி, எஸ்டி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது – பள்ளிகளுக்கு புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரி, செப். 9: புதுச்சேரி அரசின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவர்களிடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆதிதிராவிடர் நலத்துறை திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி அரசு விதிகளின்படி தகுதியுடைய எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்டாக் (CENTAC) மூலம் கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் கட்டணக் குழுவின் பரிந்துரைப்படி அரசே நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு வழங்குகிறது. எனவே, பயன்பெறும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று சரிபார்த்து நலத்துறைக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

அரசே கல்விக் கட்டணத்தை ஏற்கும் நிலையில், இம்மாணவர்களிடம் சேர்க்கைக் கட்டணமோ அல்லது அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணமோ செலுத்தும்படி பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டாயப்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன