புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை: வழக்கு விசாரணை செப்.11-க்கு ஒத்திவைப்பு!
புதுச்சேரி, 9/9/2026: புதுச்சேரியில் சகோதரர் வீட்டின் கதவை உடைத்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆஜராகாததைத் தொடர்ந்து விசாரணை வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை காவல்துறையினர் அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்ட நிலையில், வழக்கின் தொடர் விசாரணைக்காக இன்று அவர் ஆஜராகவில்லை.
இன்றைய விசாரணையின் போது, தன் மீதான சட்டப் பிரிவுகளில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அரசுத் தரப்பில் பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. அதேநேரம், சம்பவம் தொடர்பான வீடியோவை ஊடகங்களுக்கு வெளியிட்டதாகக் கூறி சகோதரரின் மனைவி மீது அமைச்சர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனுவும் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி சந்திரசேகர், இரு மனுக்கள் மீதான விசாரணையையும் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
