தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: இரவு 10 மணிக்கே மதுக்கடைகளை மூட புதுச்சேரி கலால் துறை உத்தரவு!
புதுச்சேரி, 09/09/2026: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அப்பகுதியில் செயல்படும் அனைத்து மதுக்கடைகளுக்கும் கலால் துறை கடுமையான நேரக் கட்டுப்பாடுகளை விதித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் கலால் துறை துணை ஆணையர் இந்த புதிய கட்டுப்பாட்டு உத்தரவை வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் FL-1, FL-2 மற்றும் சுற்றுலா உணவக மதுபானக்கூடங்கள் (FL2-Tourism), சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் அனைத்தும் தினமும் இரவு 10:00 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். மேலும், அப்பகுதியில் மதுபானங்களை ஏற்றிச் செல்வதற்கு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும், விதியை மீறும் மதுபான விற்பனையாளர்கள் மீது புதுச்சேரி கலால் சட்டம் 1970-இன் கீழ் கடும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கலால் துறை எச்சரித்துள்ளது.

