புதுச்சேரி

வாடகை தராமல் இழுத்தடித்த துணிக்கடை: பூட்டை உடைத்து பொருட்களை பறிமுதல் செய்த புதுச்சேரி நீதிமன்றம்!

புதுச்சேரி, செப். 10:
புதுச்சேரி காந்தி வீதியில் வாடகை தராமல் கடையை காலி செய்ய மறுத்த துணிக்கடையின் பூட்டை உடைத்து, பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான கடை காந்தி வீதியில் அமைந்துள்ளது. இந்த கடையை பாலகிருஷ்ணன் என்பவர் மாதம் ரூ.11,500 வாடகைக்கு எடுத்து கடந்த 15 ஆண்டுகளாக துணிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் பாலகிருஷ்ணன் கடைக்கு வாடகை தராமலும், கடையை காலி செய்யாமலும் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதையடுத்து கடையின் உரிமையாளர் பத்மநாபன் கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரி முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திவ்யா, கடந்த 20.11.2023 அன்று கடையை காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என வாடகைதாரர் பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். ஆனால், பாலகிருஷ்ணன் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கடையை காலி செய்யாமல் வெளிநாடு சென்றுவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் உரிமையாளர் பத்மநாபன் மீண்டும் நீதிமன்றத்தை நாடி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடையை காலி செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, நீதிமன்ற அமீனா அம்பி, கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) கவுசிகா ஆகியோர் முன்னிலையில் நீதிமன்ற ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துணிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஜவுளிப் பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன