தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: CPI வேட்பாளர் சலீமுக்கு ஆதரவு கோரி தவெக பொதுச்செயலாளருடன் சந்திப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்திடம் (தவெக) முறைப்படி ஆதரவு கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சலீமை களமிறக்க அக்கட்சியின் தலைமை முழு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர், பல்வேறு தரப்பினரிடமும் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேட்பாளர் சலீம் மற்றும் CPI முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளர் சலீமுக்கு தவெகவின் ஆதரவை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து கடிதம் அளித்தனர். இச்சந்திப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
