வேளாங்கண்ணி பேராலயம் இனி ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்: ஆயர் சகாயராஜ் அறிவிப்பு!
நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும் என்று தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், வேளாங்கண்ணி பேராலயத்திற்குத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வெளியூர்களில் இருந்து இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வரும் பக்தர்கள் சிரமமின்றி எந்நேரமும் ஆலயத்திற்குள் சென்று வழிபட வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் 3-ஆம் தேதி முதல் பேராலய வளாகம் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மறைமாவட்ட ஆயரின் இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள வேளாங்கண்ணி மாதா பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.


