புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு: ‘திருக்குறளில் மேலாண்மை’ குறித்து சிறப்புரை!

புதுச்சேரி:
புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வும், குறள் கூறும் அரங்கும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ‘திருக்குறளில் மேலாண்மை’ என்ற தலைப்பில் அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவு அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவிற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். தமிழ்ச் சங்கச் செயலர் கல்விச் செம்மல் சீனு.மோகன்தாசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகள் திருக்குறளை அழகாக ஒப்புவித்து குறள் கூறும் நிகழ்வை சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சிந்தனை அரங்கில், சோம.வீரப்பன் கலந்துகொண்டு ‘திருக்குறளில் மேலாண்மை’ என்ற மையக்கருத்தில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை தனிமனித ஒழுக்கம் மட்டுமின்றி, தலைமைப் பண்பு, திட்டமிடல், நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை உள்ளிட்ட காலத்தால் அழியாத மேலாண்மைக் கருத்துக்களை திருக்குறளில் தெளிவுபடுத்தியுள்ளார் என விளக்கினார்.
இந்நிகழ்வில் புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் ப.திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிறைவாகப் பொருளாளர் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.