பன்றிக் காய்ச்சல் பரவல் எச்சரிக்கை: தீவிர அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனை செல்ல புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
புதுச்சேரி, 05/10/2026: இந்தியாவில் பருவகால இன்புஃளுயன்சா ஏ (H1N1) எனப்படும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அவசர வழிகாட்டுதலையும் அறிவுறுத்தலையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் நபர்கள் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மூச்சுத் திணறல், தீவிர மார்பு வலி, உதடுகள் அல்லது நகங்கள் நீல நிறமாக மாறுதல், இருமலின் போது ரத்தம் கலந்த சளி வெளியேறுதல் மற்றும் தொடர்ந்து நீடிக்கும் வாந்தி போன்ற தீவிர அபாய அறிகுறிகள் ஏற்பட்டால் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அரசு அல்லது தனியார் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காய்ச்சல் உள்ளவர்கள் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

