பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடி தலைமைச் செயலக திட்டம்: உடனடியாகத் திரும்பப் பெற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அறிவிப்பு கள யதார்த்தத்திற்கு முரணானது என்றும், இந்த திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் புதிய நாடாளுமன்றமே ரூ.900 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான திட்டமிடல் இன்றி ரூ.1,200 கோடி என அறிவிக்கப்பட்டிருப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 20 லட்சம் சதுர அடி கட்டடத்திற்கு 45 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், அங்கு 25 ஏக்கர் மட்டுமே உள்ளதாகவும், கிண்டியில் 35 ஏக்கர் மாற்று நிலம் இருக்கும்போது கடற்கரை பகுதியில் இதனை அமைப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் முள்ளிக்குப்பம் பகுதியில் வசிக்கும் 1,500-க்கும் மேற்பட்ட பூர்வீக மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், அடையாறு முகத்துவார சூழலியல் மற்றும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் வாழ்விடம் பாதிக்கப்பட்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாந்தோம், ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து முடக்கம் ஏற்படும் என்பதால், இத்திட்டத்தை கைவிடாவிட்டால் மீனவ மக்களுடன் இணைந்து பாஜக தீவிரப் போராட்டம் நடத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.


