தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை!
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2-ஆம் நாளான இன்றும் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் முறைப்படி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் எவரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், இரண்டாம் நாளான இன்றும் சுயேச்சைகளோ அல்லது முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களோ எவரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்வதிலும், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் வரும் நாட்களில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் திரளாக வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.