மயிலாப்பூரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!
சென்னை, பிப். 28: சென்னை மயிலாப்பூர் – பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அகலம் குறைந்த சாந்தோம் நெடுஞ்சாலை, 8-க்கும் மேற்பட்ட பள்ளிகள், பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கொண்ட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் பல மாடிகளுடன் தலைமைச் செயலகம் அமைப்பது மக்கள் நலனுக்கு எதிரான மோசமான திட்டமிடலாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் சூழலில், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூடுதல் நடமாட்டத்தால் ஏற்படும் பாதிப்பை பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் சுமக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
கடற்கரைப் பகுதி என்பது மீனவ மக்களின் வாழ்வாதாரம் என்றும், அது அரசுக்கான வெறும் கட்டுமான இடம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மக்களின் குடியிருப்பு, வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நலனைப் பாதுகாக்கும் வகையில் மாற்று இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைக்க வேண்டும் என்றும், மயிலை மக்களின் பிரதிநிதியாக இந்த மக்கள் விரோதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



