அரசியல்

5 மாநில தேர்தல்: பாஜக ரூ.1,473 கோடி நிதி திரட்டி சாதனை; புதுச்சேரியில் ரூ.11.90 கோடி செலவு

புதுச்சேரி, செப். 10:

புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் காலகட்டத்தில், பாஜக தனது தலைமை அலுவலகத்திற்கு மட்டும் சுமார் ரூ.1,473 கோடி நிதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன. இது காங்கிரஸ் கட்சி திரட்டிய ரூ.207 கோடியை விட ஏழு மடங்குக்கும் அதிகமான தொகையாகும்.

தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, காங்கிரஸ் கட்சி ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து ரூ.207.17 கோடி நிதி திரட்டி, ரூ.248.55 கோடியை செலவிட்டுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸின் கையிருப்பு நிதி ரூ.65.86 கோடி வரை குறைந்துள்ளது. மாறாக, பாஜகவின் மத்திய தலைமை அலுவலக கையிருப்பு நிதி ரூ.6,722.6 கோடியிலிருந்து ரூ.7,627.2 கோடியாக, அதாவது ரூ.904.6 கோடி உயர்ந்துள்ளது.

மாநில வாரியான தேர்தல் பிரச்சார செலவினங்களில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக ரூ.11.90 கோடி செலவழித்துள்ளது. இதில் பொதுப் பிரச்சாரத்திற்கு ரூ.9.19 கோடியும், வேட்பாளர்களுக்கான செலவுகளுக்காக ரூ.2.71 கோடியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தில் ரூ.51.56 கோடியும், அசாமில் அதிகபட்சமாக ரூ.96.27 கோடியும் பாஜக செலவிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன