பி.எட். 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை: காலியாக உள்ள 578 இடங்களுக்கு செப்.15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை, 10/09/2026:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பி.எட். பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 70 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், 10 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 508 இடங்கள் என மொத்தம் 578 பி.எட். இடங்கள் காலியாக உள்ளன.
இந்தக் காலியிடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பி.எட். பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவியர் www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி, வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, சென்னை என்.கே.டி. மகளிர் கல்லூரி, மெஸ்டன் கல்லூரி, ஸ்டெல்லா மேட்டூடினா கல்லூரி, தூய கிறிஸ்டோபர் கல்லூரி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா ஆடவர் கல்வியியல் கல்லூரி, நெல்லை பாளையங்கோட்டை தூய சேவியர் மற்றும் தூய இக்னேஷியஸ் மகளிர் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 10 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் காலியிடங்கள் உள்ளன என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


