புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை ஓவிய ஆசிரியர் நியமன விதிகளில் திருத்தம்: கருத்து தெரிவிக்க அழைப்பு

புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறையில் ஓவிய ஆசிரியர் (Fine Arts Teacher) பணியிடங்களுக்கான நியமன விதிகளில் (Recruitment Rules) திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (நிர்வாகம்) எஃப்.பி. வெர்பினா ஜெயராஜ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், கடந்த 31.12.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 142-ன் கீழ் உள்ள ஓவிய ஆசிரியர் பணியிடத்திற்கான தற்போதைய தேர்வு மற்றும் நியமன விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) வழிகாட்டுதல்படி, உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆலோசனைகள் அல்லது கருத்துகள் இருப்பின், சம்பந்தப்பட்டவர்கள் வரும் அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தங்கள் கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது dteestt@dsepdy.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம் என்று கல்வித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓவிய ஆசிரியர் பணியிட நியமன விதிகளில் மாற்றம் செய்யப்படுவது ஆசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் மத்தியில் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)


