புதுச்சேரி அரசின் சிறந்த ஆசிரியர் பிராந்திய விருது: மாஹே செம்பரா அரசு பள்ளி தலைமை ஆசிரியை சிந்து சாதனை

புதுச்சேரி, செப். 5:
புதுச்சேரி அரசின் சிறந்த ஆசிரியருக்கான பிராந்திய விருதை மாஹே பகுதியைச் சேர்ந்த செம்பரா அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஏ.வி. சிந்து பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் சிறப்பான பணிகளை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், மாஹே பிராந்தியத்தில் செம்பரா அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் திருமதி ஏ.வி. சிந்து அவர்களின் கல்வி மற்றும் பள்ளி மேம்பாட்டு பணிகளை பாராட்டி அவருக்கு சிறந்த ஆசிரியருக்கான பிராந்திய விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவரது தலைமையிலான நிர்வாகத்தின் கீழ், மத்திய அரசின் ‘ஸ்வச் ஏவம் ஹரித் வித்யாலயா 2025–26’ தேசிய அளவிலான தரவரிசையில் செம்பரா அரசு தொடக்கப்பள்ளி அகில இந்திய அளவில் 2-ஆம் இடம் பிடித்து மகத்தான சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி தரம் மற்றும் தூய்மையான பள்ளி சூழலை மேம்படுத்தியமைக்காக இவ்விருதை வென்றுள்ள தலைமை ஆசிரியை திருமதி ஏ.வி. சிந்து அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
