ஆசிரியர் தின வாழ்த்து: எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களுக்கு துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் புகழாரம்!
புதுச்சேரி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் ஆசிரியர் பெருமக்களுக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஆசிரியர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி துணைநிலை ஆளுநர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களை நினைவுகூர்ந்து, மாணவச் செல்வங்களுக்கு அறிவையும் நற்பண்புகளையும் விதைத்து, நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

