“எம்.எல்.ஏ.-க்களின் கோரிக்கைகள் பேச்சோடு நிற்காமல் செயல்படுத்தப்பட வேண்டும்”: எல்.ஜே.கே. தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேட்டி!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காக முன்வைக்கும் கோரிக்கைகள் வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று எல்.ஜே.கே. (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளும் தற்போது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன என்று தெரிவித்தார். அதேநேரத்தில், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி மற்றும் பொதுமக்கள் நலன் கருதி எழுப்பும் நியாயமான கோரிக்கைகள் வெறும் அறிவிப்புகளாகவும் பேச்சளவிலும் மட்டுமே நின்றுவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், எம்.எல்.ஏ.-க்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு மேற்கொள்ளும் பணிகள் மற்றும் திட்டங்கள் எந்த அளவில் நடைபெற்று வருகின்றன என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்ந்து நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலமே மக்கள் பணிகளின் தரம் உறுதி செய்யப்பட்டு, அரசின் திட்டங்கள் பொதுமக்களை விரைவாகச் சென்றடையும் என்று அவர் குறிப்பிட்டார்.
