புதுச்சேரியில் கவனத்தை திசைதிருப்பி தங்க மோதிரங்கள் பறிப்பு: கடலூர் நபர் கைது – ரூ.1.5 லட்சம் நகைகள் மீட்பு!
புதுச்சேரி: புதுச்சேரி முருங்கபாக்கம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நைசாக பேசி கவனத்தை திசைதிருப்பி, அவர் அணிந்திருந்த இரண்டு தங்க மோதிரங்களை பறித்துச் சென்றார். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (SSP) ஆர்.கலைவாணன் உத்தரவின்பேரில், தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் மேற்பார்வையில் முதலியார்பேட்டை போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பல்வேறு சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், மூதாட்டி/முதியவர்களிடம் கவனத்தை திசைதிருப்பி திருடும் செயலில் ஈடுபட்டது கடலூர் திருப்பாப்புலியூரைச் சேர்ந்த பாரதி என்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குற்றவாளி பாரதியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடமிருந்து ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான இரண்டு தங்க மோதிரங்களையும் அதிரடியாக மீட்டனர். விசாரணையில், இவர் மீது இதேபோன்று கவனத்தை திசைதிருப்பி திருடிய 2 வழக்குகள் தமிழ்நாட்டில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த முதலியார்பேட்டை தனிப்படை போலீசாரை எஸ்.எஸ்.பி ஆர்.கலைவாணன் நேரில் வெகுவாகப் பாராட்டினார்.
