கதிர்காமத்தில் பாதாள சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு: அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. அழகானந்தம் தீவிர ஆலோசனை

சேதராப்பட்டு, செப். 4:
புதுச்சேரி கதிர்காமம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரமேஷ் (எ) அழகானந்தம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறையின் கழிவுநீர் வடிகால் மற்றும் குடிநீர் பிரிவு செயற்பொறியாளர் சுந்தரி, உதவி பொறியாளர் பாஸ்கர், இளநிலை பொறியாளர் மார்சல் சகாயராஜ் மற்றும் கதிர்காமம் தொகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனையின்போது, வரவிருக்கும் பருவமழை காலத்திற்கு முன்பாக கதிர்காமம் தொகுதி முழுவதும் உள்ள பாதாள சாக்கடை வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் முழுமையாகச் சரிசெய்து தூர்வார வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.