தலைமைச் செயலாளரை விட எம்.எல்.ஏ.-க்களுக்கே அதிக அதிகாரம்: புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் ஆவேசம்!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசு நிர்வாகம் மற்றும் துறைசார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தீவிரமாக நடைபெற்றது. அப்போது, அரசு உயர் அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் அலட்சியப் போக்கு குறித்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் அவையில் விரிவாகப் பேசி தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்தனர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து மிகக் காரசாரமாகக் கருத்துகளைத் தெரிவித்தார்.அப்போது பேசிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, தலைமைச் செயலாளரை விட கூடுதல் அதிகாரமும் முக்கியத்துவமும் உள்ளது. அரசு விழாக்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் வருகை தந்த பிறகும் தலைமைச் செயலாளர் தாமதமாக வரும் சூழல் நிலவுகிறது. முதலமைச்சர் அழைப்பு விடுத்தாலும் கூட சில செயலர்கள் நேரில் வருவதில்லை. இந்த நடைமுறை முற்றிலும் தவறானது” என்று ஆவேசமாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் தகுதியையும் இந்த சட்டப்பேரவை நிச்சயம் மீட்டெடுத்துக் கொடுக்கும். அரசு நிகழ்வுகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களை உரிய மரியாதையுடன் வரவேற்பதும், அவர்கள் அமர்ந்த பிறகே தலைமைச் செயலாளர் அமர்வதும் தான் அரசு நெறிமுறை மற்றும் கடமையாகும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து சபாநாயகர் ஆற்றிய இந்த உரை சட்டப்பேரவை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
