மூடப்பட்ட சாராயக்கடை மீண்டும் திறப்பு: தேசியக் கொடியுடன் கிராம மக்கள் மறியல்
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட லிங்காரெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த சாராயக்கடையை, ஊரின் மையப்பகுதியில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உள்துறை அமைச்சருமான ஆ. நமச்சிவாயத்திடமும் கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக அந்த சாராயக்கடை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுதந்திர தினமான இன்று காலை திடீரென சாராயக்கடை மீண்டும் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், கடையை மீண்டும் மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லிங்காரெட்டிபாளையம் நான்கு முனை சந்திப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சாராயக்கடையை ஊருக்குள் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


