வயநாட்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிலச்சரிவு நிவாரண டவுன்ஷிப் கட்டுமானத்தை ஆய்வு செய்தார் பிரியங்கா காந்தி!

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வதேரா, தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ‘திஷா’ (DISHA) ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தொகுதி அளவிலான வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாகக் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, மின்சாரம், சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்ட பிரியங்கா காந்தி, வயநாடு பகுதியில் தொடரும் மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தார்.
இறுதியாக, சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டு வரும் டவுன்ஷிப் கட்டுமானப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளின் நிலையை கேட்டறிந்த அவர், பணிகளை விரைவாக முடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


