வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம்: புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
புதுச்சேரி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் முன்னெச்சரிக்கையாக புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு முதல் செப்டம்பர் 24-ஆம் தேதி அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே வட ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் கவனமுடன் இருக்குமாறும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


