புதுச்சேரி

கனடாவில் விமான விபத்தில் புதுச்சேரி மாணவர் பலி: உடலை கொண்டுவர ஆளுநரிடம் எம்.எல்.ஏ நேரு மனு!

புதுச்சேரி: கனடா நாட்டில் நடைபெற்ற விமான விபத்தில் புதுச்சேரி மற்றும் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த புதுச்சேரி மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கக் கோரி துணைநிலை ஆளுநரிடம் உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நேரு மனு அளித்துள்ளார்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை கல்வே பங்களா பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் மனோஜ். இவர் கனடா நாட்டில் உள்ள ‘HARV’S AIR’ என்ற பயிற்சி நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விமானி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், அவர் செஸ்னா 172 (Cessna 172) ரக சிறிய ரக விமானத்தில், சென்னையைச் சேர்ந்த சக மாணவரான ஸ்ரீசரண் என்பவருடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சஸ்காச்சுவான் மாகாணத்தில் உள்ள கிஸ்பி (Kisbey) பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இத்தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவர் மனோஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து, கனடாவில் உயிரிழந்த மனோஜின் உடலை தாயகம் கொண்டுவந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வெளியுறவுத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சட்டமன்ற உறுப்பினர் நேரு மாணவரின் பெற்றோருடன் சென்று புதுச்சேரி துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன