தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தவெக மற்றும் விசிக ஆதரவை கோரியது சிபிஐ!
புதுச்சேரி, செப். 12: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கோரி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்களை சிபிஐ பிரதிநிதிகள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிபிஐ புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.எம். சலீம் தலைமையிலான குழுவினர் சென்னை சென்றனர்.
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்தை நேரில் சந்தித்த சிபிஐ குழுவினர், தட்டாஞ்சாவடி தொகுதியில் தங்களுக்கு உள்ள வாக்கு வங்கி மற்றும் கள நிலவரத்தை எடுத்துரைத்து ஆதரவு தருமாறு முறைப்படி கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனையும் சிபிஐ தலைவர்கள் சந்தித்துப் பேசினர். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விசிகவின் ஆதரவையும் அவர்கள் முறைப்படி கோரியுள்ளனர்.
