புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காவல்துறையுடன் ஒத்துழைத்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் துணைநிலை ஆளுநர் க. கைலாஷ்நாதன் தேசியக் கொடியேற்றி உரையாற்ற உள்ளார். இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காக்கள், கடற்கரை பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கவனக்குறைவாக வைக்கப்பட்டுள்ள பொருட்களை தொடவோ, நகர்த்தவோ கூடாது என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், முக்கிய அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என புதுச்சேரி வடக்கு வட்டார துணை ஆட்சியர் தயானந்த் டெங்கோரி தெரிவித்துள்ளார்.
