புதுச்சேரியில் ஒருவழிப் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மிஷன் தெரு மற்றும் எம்.ஜி. சாலை பகுதிகளில் ஒருவழிப் போக்குவரத்து நடைமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் (போக்குவரத்து வடக்கு) டாக்டர் ரஞ்சனா ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து காரணமாக நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் இந்த இரு சாலைகளிலும் ஒருவழிப் போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள், போக்குவரத்து காவல்துறையின் ஆய்வு மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நடைமுறைப்படி, மிஷன் தெருவில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்; தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்ல அனுமதி இல்லை. எம்.ஜி. சாலையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்; வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் இரு சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படுவதுடன், சாலைகளில் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட உள்ளன. புதிய நடைமுறையை அனைத்து வாகன ஓட்டிகளும் கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


