புதுச்சேரி

புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 200 மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

புதுச்சேரி, செப். 4:

புதுவை சாரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளியில் 1990-ம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ‘எஸ்.ஆர்.எஸ்.-90’ என்ற அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தாங்கள் கல்வி பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்கும், தற்போது அங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கல்வித் தேவைகளுக்கும் தொடர்ச்சியாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் மாணவர் குழு தொடங்கப்பட்டு 6-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் உள்ளிட்ட எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை கலந்துகொண்டு, எஸ்.ஆர்.எஸ்.-90 குழுவினரின் கடந்த 6 ஆண்டுகால பள்ளிக்கான சமூக மற்றும் நலப்பணிகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

மேலும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் குழு சார்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன