ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்க வேண்டும்: புதுச்சேரி முதலமைச்சருக்கு கோரிக்கை!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரத்து குறைவு காரணமாக வெளிச்சந்தையில் வெங்காய விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ள நிலையில், சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வெளிச்சந்தையில் வெங்காய வரத்து குறைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை ஏற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் அன்றாட சமையல் தேவைகளுக்கு வெங்காயம் வாங்க முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகள் வழியாகக் குறைந்த விலையில் வெங்காயம் விநியோகிக்கப்பட்டு வரும் சூழலில், அதே நடைமுறையைப் புதுச்சேரியிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி சாமானிய மக்களை விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

