Uncategorized

தமிழகத்தில் 4,724 ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தேசிய நல்வாழ்வு குழுமம் அறிவிப்பு

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் தேசிய நல்வாழ்வு குழுமம் (NHM-TN) சார்பில், மாநிலம் முழுவதும் 4,724 தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் (Contractual / Temporary Staff Nurse) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கீழ் செயல்படும் மருத்துவ நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் கல்லூரிகளில் ஜி.என்.எம் (GNM) அல்லது பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing) முடித்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர் மன்றத்தில் (Tamil Nadu Nurses and Midwives Council) பதிவு செய்திருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர்த்து, இதர மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட சுகாதார சங்கத்தின் செயல் செயலருக்கு (The Executive Secretary, District Health Society) விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரங்களை https://nhm.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ் நகல்களுடன் 25.09.2026 அன்று மாலை 5:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலகத்தை சென்றடைய வேண்டும் என தேசிய நல்வாழ்வு குழுமத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன