7 மாநில கிராமப்புற பள்ளி ஆசிரியர்களுக்கு அரவிந்தர் ஆசிரமத்தில் செயல்வழிக் கற்றல் பயிற்சி!

புதுடெல்லி:
இந்தியாவின் 7 மாநிலங்களைச் சேர்ந்த 15 கிராமப்புறப் பள்ளிகளின் 41 ஆசிரியர்களுக்கு, புதுடெல்லியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம கிளையில் முழுமையான கல்வி முறை மற்றும் திட்ட அடிப்படையிலான செயல்வழிக் கற்றல் (Project-Based Learning) குறித்த ஒரு வார கால சிறப்புப் பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆரோவில் இன்டர்நேஷனல் யுஎஸ்ஏ (AVI USA) அமைப்பின் நிதி ஆதரவுடன் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், ஆசிரியர்கள் அறிவியல் சோதனைகள், பொம்மலாட்டம் மற்றும் பாடல்கள் வாயிலாக மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் செய்முறைப் பயிற்சிகளை மேற்கொண்டனர். மேலும் கணிதம், அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களை ஒருங்கிணைத்து எளிமையான முறையில் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் இதில் பயிற்றுவிக்கப்பட்டன.
பயிற்சியில் பங்கேற்ற 15 பள்ளிகளுக்கும் வகுப்பறைகளில் செய்முறை கற்றலை செயல்படுத்தும் வகையில் தலா 34 உபகரணங்கள் கொண்ட கற்றல் தொகுப்புகள் (Teaching Kits) வழங்கப்பட்டன. இதில் ரோபோடிக்ஸ் கருவிகள், சூரிய குடும்ப மாதிரி, லென்ஸ்கள் மற்றும் அறிவியல் உபகரணங்கள் அடங்கும். டெல்லி அரவிந்தர் ஆசிரமம் இந்தியா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கிராமப்புறப் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
