புதுச்சேரியில் ஸ்கேட்டிங் பயிற்சிக்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழப்பு
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி திண்டிவனம் பைபாஸ் சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சிக்காக சென்ற எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ். இவரது மனைவி குணவதி, இவர்களது மகன் கீர்த்தன் குருபரன். இவர்கள் கடந்த 18ஆம் தேதி ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதற்காக புதுச்சேரி திண்டிவனம் பைபாஸ் சாலையில் உள்ள இரும்பை சந்திப்பு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சாலையோரமாக கீர்த்தன் குருபரன் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் மூன்று பேரும் வீட்டிற்கு புறப்பட்டபோது, பின்னால் வேகமாக வந்த மகிழுந்து அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. எதிர்பாராத இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் மகிழுந்தும் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குணவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழ் மற்றும் கீர்த்தன் குருபரன் ஆகியோர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தன் குருபரன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த தமிழும் உயிரிழந்ததை அடுத்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மகிழுந்தை ஓட்டி வந்த காரைக்கால் வரிச்சிக்குடி காந்திநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.