புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் மழை பாதித்த பகுதிகளில் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் நேரில் ஆய்வு: மழைநீரை அகற்ற அதிரடி உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாகத் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதிகளில் நிலவும் பாதிப்புகளை நேரில் கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் அதிரடி கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஈ.சி.ஆர். சாலையில் மழை காரணமாக ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கண்ட அவர், களத்தில் இறங்கி போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு தொகுதிக்குட்பட்ட ராஜாஜி நகர், வேலன் நகர், சென்னை மேடு, லட்சுமி நகர், குண்டுபாளையம், கவுண்டன்பாளையம், மோகன் நகர் மற்றும் சுப்பையா நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரில் சென்றார். அங்கு தெருக்களிலும் குடியிருப்புகளின் முன்பும் தேங்கியுள்ள மழைநீரின் அளவை விரிவாகப் பார்வையிட்ட அவர், அப்பகுதி மக்களிடம் குறைகளையும் பாதிப்புகளையும் கேட்டறிந்தார். தாழ்வான பகுதிகளில் உடனடியாக மழைநீரை வெளியேற்றத் தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

ஆய்வின் தொடர்ச்சியாக, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசிய எம்.எல்.ஏ அசோக் ஆனந்த், நீர் தேங்கியுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு எவ்வித தொற்றுநோயோ அல்லது அன்றாடப் போக்குவரத்தில் இடையூறோ ஏற்படாத வண்ணம் வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாரி, அடைப்புகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்குக் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

புதுச்சேரியில் அண்மைக்காலமாகத் தொடரும் தீவிர வானிலை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் தீவிர பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாகக் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் வீட்டின் மீது இடி தாக்கி உபகரணங்கள் சேதமடைந்த சூழலில், தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்களுக்கு கூடுதல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் சட்டமன்ற உறுப்பினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தட்டாஞ்சாவடி தொகுதியில் தேங்கிய மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன