புதுச்சேரியில் இடியுடன் கொட்டித்தீர்த்த கனமழை: கிருஷ்ணா நகரில் வீட்டைத் தாக்கிய இடி – மின்சாதனங்கள் சேதம்!
புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்து வரும் பலத்த மழையின் போது காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் இடி தாக்கியதில் ஒரு வீட்டில் இருந்த பல்வேறு மின்னணு மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணா நகர் 1-வது குறுக்குத் தெரு விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ள 22-ஆம் எண் கொண்ட வீட்டில் குணசுந்தரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இரவு நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையின்போது, எதிர்பாராத விதமாக இடி இவரது வீட்டின் மீது பாய்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த திடீர் இடித் தாக்குதலின் தாக்கத்தால் வீட்டின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தண்ணீர்த் தொட்டி விரிசல் அடைந்து சேதமடைந்தது. மேலும் வீட்டிற்குள் மின் அழுத்தம் கடுமையாக அதிகரித்து 5 மின்விசிறிகள், குடிநீர் சுத்திகரிப்பான் (Water Purifier), குளிர்சாதனப் பெட்டி (Fridge) மற்றும் தண்ணீர் இறைக்கும் மோட்டார் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் அனைத்தும் கருகி முற்றிலும் செயலிழந்தன.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த குடும்பத்தினர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர். எனினும், வீட்டின் அத்தியாவசிய உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்ததால் அக்குடும்பத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சேதமடைந்த பொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.