தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடியாக களம் இறங்கியது 15 பைக் படை!
புதுச்சேரி, அக். 5:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்கவும் தேர்தல் துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபானங்கள், போதைப்பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கடத்தப்படுவதைத் தடுக்க 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 9 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 2 காணொலி கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 2 காணொலி பார்வையிடும் குழுக்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எல்லைப்பகுதிகளில் 3 சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய இறுதி நேர கண்காணிப்பை பலப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறுகிய தெருக்கள் மற்றும் உட்புறப் பகுதிகளுக்குள் விரைந்து சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள ஏதுவாக, 15 இருசக்கர வாகன பறக்கும் படைகள் மற்றும் கூடுதலாக 3 பறக்கும் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவிக்கையில், தேர்தல் விதிமீறல் அல்லது பணப்பட்டுவாடா குறித்த புகார் பெறப்பட்ட 5 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க பைக் படைகள் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

