புதுச்சேரி

திருக்கனூர் அரசுப் பள்ளி ஆசிரியர் புவனராஜா எழுதிய ‘இரண்டு முத்தங்கள்’ நூல் வெளியீடு: அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார்

புதுச்சேரி, அக். 05: புதுச்சேரி திருக்கனூர் எம்.டி.ஆர்.ஆர். அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் புவனராஜா எழுதிய ‘இரண்டு முத்தங்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா புதுவை மாநில கூட்டுறவு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலினை முறைப்படி வெளியிட்டார். விழாவில் கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர் குலசேகரன் மற்றும் வில்லியனூர் பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தணிகாசலம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து வீராம்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பூங்கோதை ‘இரண்டு முத்தங்கள்’ நூலின் கவிதை நயங்கள் மற்றும் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் பள்ளி துணை ஆய்வாளர் குமார், திருக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அனிதாகுமாரி, கல்வெட்டு ஆய்வாளர் எத்திராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்திப் பேசினர்.

இந்நிகழ்ச்சியினை ஆசிரியை மஞ்சுளா நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார். நிறைவாக நூல் ஆசிரியர் புவனராஜா மற்றும் திருக்கனூர் பள்ளி ஆசிரியர் அன்பரசன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். இவ்விழாவில் திரளான ஆசிரியர்கள், கவிஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன