புதுச்சேரி

புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமில் தொடர் விடுமுறையில் ரூ.21 லட்சம் வருவாய் வசூல் சாதனை

புதுச்சேரி, அக்.05: புதுச்சேரிக்கு வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் விரும்பி செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக நோணாங்குப்பம் படகு குழாம் விளங்கி வருகிறது.

வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். அந்த வகையில், கடந்த 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை அமைந்தது. இதன் காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை புரிந்தனர்.

குறிப்பாக, நோணாங்குப்பம் சுன்னாம்பாறு படகு குழாமில் பாரடைஸ் கடற்கரைக்கு படகு சவாரி செல்ல சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணித்தனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் படகு குழாமிற்கு சுமார் ரூ.21 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வரும் தங்களுக்கு போதிய அளவில் படகுகள் இயக்கப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் போதிய அளவில் பராமரிக்கப்படவில்லை என்றும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கூடுதல் படகுகளை இயக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன