புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: ரூ.5 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் – மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல்

புதுச்சேரி, அக். 05: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்க நாணயங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான ஏ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த 4-ஆம் தேதி வரை தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 655 ரூபாய் மதிப்பிலான 282.62 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 20 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் தங்க நாணயங்கள், இரண்டரை டன் எடையிலான குக்கர்கள், வேட்டி மற்றும் சேலைகள் உள்ளிட்ட 3 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 761 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொகுதியில் தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் 9 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை முன்னிட்டு தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட 15 மதுபானக் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன