புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பிரம்மாண்ட பைக் பேரணி!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக வேட்பாளர் சேது செல்வத்தை ஆதரித்து கழகத் துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி மற்றும் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆசியுடன் சேது செல்வம் போட்டியிடுகிறார். கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தது முதல், கழக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, மாநில அமைப்பாளர் இரா.சிவா, எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இவர்களுடன் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் பூத் வாரியாக முகாமிட்டு தீவிர களப்பணி ஆற்றினர்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் தருணத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, மாநில அமைப்பாளர் இரா.சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் பேரணியில் அணிவகுத்தனர்.

புதுப்பேட்டையில் தொடங்கிய இந்த இருசக்கர வாகனப் பேரணியானது அவ்வை நகர், ராஜாஜி நகர், கனகன் தோட்டம், ஆனந்தபுரம், கொட்டுப்பாளையம், சின்னையன்பேட், வினோபா நகர், பொய்யாக்குளம், சுப்பையா நகர், மோகன் நகர், கவுண்டம்பாளையம் மற்றும் குண்டுபாளையம் உள்ளிட்ட தொகுதியின் 31 பூத் பகுதிகளுக்கும் சென்றது. பேரணி சென்ற வழிநெடுகிலும் பொதுமக்களும் பெண்களும் திரண்டு வந்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது பேசிய தலைவர்கள், மக்களுக்குத் துரோகம் இழைத்த என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் சந்தர்ப்பவாதக் கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேது செல்வத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களிடம் தீவிரமாக வலியுறுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன