தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!

புதுச்சேரி, அக். 06:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வாக்குப்பதிவுக்கு மறுநாளான நாளை (அக்டோபர் 7) ஒரு நாள் பணி விடுப்பு (Off) வழங்கி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 09-தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை) விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் பணியில் ஆசிரியர்கள், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளில் தீவிரமாக ஈடுபட்டு வாக்குப்பதிவு பணிகளை மேற்கொண்டனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பது உள்ளிட்ட பணிகள் நள்ளிரவு வரை நீடிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, பணியாளர்களின் நலன் கருதி விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை (DPAR) சார்பாக அரசு சார்புச் செயலாளர் எஸ். முருகேசன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்களும் வாக்குப்பதிவு மறுநாளான அக்டோபர் 7, புதன்கிழமை அன்று தங்களது பணிகளிலிருந்து விலக்கு பெற்று ஒரு நாள் விடுப்பு (Off) எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து துறைத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.